search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டாறு அணை"

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அடியானது குண்டாறு அணையும் நிரம்பியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று மாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை ஓரளவு தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல பழையகுற்றால அருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் இன்று நன்றாக தண்ணீர் விழுந்தது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு பகுதியில் 82 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணைப்பகுதியிலும் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாபநாசம் அணைப் பகுதியில் இன்று காலை வரை 1 மில்லிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. ஆனாலும் அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வருகிறது. கீழ்அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 67.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 113.35 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சற்று கூடி இன்று 83.90 அடியாக உள்ளது. கடனாநதி அணைநீர்மட்டம் 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும் இன்று உயர்ந்துள்ளது.

    அடவிநயினார் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 109 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அங்கு முழுகொள்ளளவான 52.50 அடி தண்ணீர் உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குண்டாறு அணைப்பகுதியில் இடைவிடாமல் கனமழை கொட்டியது. 82 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று குண்டாறு அணையில் 33.13 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மளமளவென்று 3 அடி உயர்ந்து முழுகொள்ளளவான 36.10 அடியை இன்று காலை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் வழிந்தோடி ஆற்றில் செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 82
    அடவிநயினார் - 16
    தென்காசி    - 15
    செங்கோட்டை - 5
    சேர்வலாறு - 4
    சிவகிரி - 2
    பாபநாசம் - 1

    ×